The Legacy of the Pioneers
2007-03-18 by விருபா - Viruba |
0
கருத்துகள்
பிருத்தானியரின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை/பொருளீட்டலை நோக்கமாகக்கொண்டு ஈழத் தமிழர்கள் மலேசியாவிற்கு குடியகல்வுகளை மேற்கொண்டார்கள். இக்குடியகல்வில் இப்போதுள்ளது போன்ற உயிராபத்திற்காக புலம்பெயர்தல் என்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே வேலை தேடி சென்றார்கள். அப்படியாக யாழ்ப்பணத்திலிருந்து மலேசியாவிற்கு ஈழத் தமிழர்கள் சென்று 125 ஆண்டுகள் ஆகிவிட்டது.
வளப்படுத்தப்படாத மலேயாவிற்கு ஆரம்ப நாட்களில் வந்தவர்கள் கொடிய நோய்களுக்கு மத்தியில், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தனிமையில் பல இன்னல்களைக் கடந்து, பெரும்பாலும் தொடர்வண்டித்துறை, நில அளவைத் துறை, பொது அலுவலகத்துறை போன்ற துறைகளில் ஆரம்ப கட்ட உத்தியோகத்தர்களாகச் சேர்ந்து படிப்படியாக உயர் பதவிகளை அடைந்தார்கள்.
இப்படியாக யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியாவிற்கு வந்த தமிழர்களின் 125 வருட காலத்தின் பதிவாக "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia" என்ற நூல் ஆங்கிலத்தில் கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலானது A4 அளவு தாளில், 654 பக்கங்களுடன், 2.5kg நிறையில், கெட்டியான கட்டமைப்புடன் சுமார் 400 இற்கும் அதிகமான புகைப்படங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பில் வந்துள்ளது.
இந்நூலை யாழ்ப்பணத்தைத் தாயகமாகக் கொண்ட செல்வரத்தினம் அவர்களும் அப்புத்துரை அவர்களும் கூட்டாகத் தொகுத்துள்ளார்கள். இவர்கள் இருவருமே மலேசியாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.
இந்நூலானது இரண்டு நிலைகளில், கெட்டியான அட்டையுடன் 175.00 மலேசியன் வெள்ளிக்கும், மலிவுப் பதிப்பு 110.00 மலேசியன் வெள்ளிக்கும், விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நூலை எழுதுவதற்காக தொகுப்பாளர்கள் இருவரும் மூன்று வருடங்களுக்கு மேலாக கடின ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். மலேசிய அரசாங்கத்தின் ஆவணத்துறையில் இருந்தே பல அரிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு 1879 இல் ஒரு யாழ்ப்பணத்தமிழர் எந்த நாளில், எந்தப் பதவியில், எந்தத் துறையில் சேர்ந்துள்ளார் என்பதும் அவருக்கு அன்றைய திகதியில் வழங்கப்பட்ட சம்பளம் என்ன?, அவர் எந்த வருடத்தில் ஓய்வு பெற்றார்?, அவரது ஓய்வூதியம் என்ன?, என்பது போன்ற தகவல்கள் இந்நூலில் உள்ளன.
மலேசிய அரசாங்கத்தின் ஆவணத்துறையின் வெளியீடுகள் தவிர சுமார் 60 இற்கு மேற்பட்ட நூல்கள், வெளியீடுகள், குறிப்புகள், ஆண்டு மலர்கள் போன்றவற்றில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளியான "The Hundred Years of Ceylonese in Malaysia and Singapore" என்ற நூலும் அதன் ஆசிரியர் Dr.S.Durai Raja Singam அவர்களின் தனிமனித முயற்சியுமே தங்களுக்கு ஒரு வழிகாட்டலாக இருந்ததாக தொகுப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியா அரசாங்கத்தில் அதியுயர் பதிவிகளை வகித்தவர்கள், அதியுயர் விருதுகளைப் பெற்றவர்கள், வியாபார ரீதியாக உயர் நிலையில் உள்ளவர்கள், சர்வதேச அமைப்புக்களில் உயர் பதவிகளில் உள்ளவர்கள், மலேசியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றிய யாழ்ப்பணத் தமிழர்கள், மலேசியாவின் புகழ் பெற்ற இரட்டை கோபுரத்தில் (Petronas - Twin Towers) யாழ்ப்பணத் தமிழருக்கு உள்ள உரிமை, பற்றிய பல தகவல்கள் ஒருங்கே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் யாழ்ப்பணத் தமிழர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள், சமயப் பணிகள், கட்டிய கோவில்கள், கலை காச்சாரப் பணிகள், பொழுது போக்கு விடயங்கள், மருத்துவப் பணிகள், விளையாட்டுக்கள் என்று ஒவ்வொரு விடயமும் இந்நூலில் பதிவு செய்யப்படுட்டுள்ளது.
இந்நூலிற்கு முன்னாள் மலேசிய உயர் நீதிமன்ற நீதிபதியும் உலக வங்கியில் பணியாற்றியவருமான Dato' Seri Dr Visu Sinnadurai அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
இந்நூலினை தொகுப்பாளர்களே பதிப்பித்துள்ளனர்.
அவர்களின் தொடர்பு முகவரி:
T.Selvaratnam & S.Apputhurai
6, Jalan Chekor, off Jalan Halimahton
Kuala Lumpur 58000
Malaysia
Tel: 60-3-79816416
Fax: 60-3-22872657
e-mail: jaffnalegacy@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)